Thursday, 10 January 2013

யானை



யானையின் பண்புகள்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (70 ஆண்டுகள்). மனிதர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம், புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை.
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
யானையினங்கள்
ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காதுகளை கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால் முன்னங் கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காதுகள் சிறியனவாக இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழ் இருக்கும். முன்னங் கால்களில் ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.
தந்தம்
யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையாது. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர். தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.

No comments:

Post a Comment